திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு இபி காலனியைச் சேர்ந்த நவீந்திரன், கரோனா பெருந்தொற்று தடுப்புப் பணியில் காவல் துறையுடன் இணைந்து, காவல் துறை நண்பர்கள் குழுவில் பணி செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை காமராஜபுரம் பகுதியில் நவீந்திரன், அவரது நண்பர்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஷேக் முகமதுவை, தடுத்து நிறுத்தி இப்பகுதியில் வேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதில், ஷேக் முகமதுவுக்கும் நவீந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருகிலிருந்தவர்கள் ஷேக் முகமதுவை பேசி அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அங்கிருந்து சென்ற ஷேக் , இரவில் அங்கு வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து நவீந்திரனை சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் நவீந்திரன் சாய்ந்தவுடன் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் ஷேக் சரணடைந்துள்ளார்.