திண்டுக்கல்: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்கள் பசியாறக்கூடிய வகையில் அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. கரோனா ஊரடங்கின்போது அம்மா உணவகம் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுவந்தது.
இந்நிலையில் தற்போது திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றக்கூடிய 24 பெண் ஊழியர்களை இன்று (ஜூலை 31) திடீரென எந்த முன் அறிவிப்பும் இன்றி வேலையை விட்டு நிறுத்தியதாகத் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மா உணவக பெண் பணியாளர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் தகவலறிந்து அங்கு விரைந்த நகர வடக்கு காவல் நிலைய அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று பிரச்சினையைத் தெரிவிக்குமாறு கூறி அனுப்பிவைத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் திண்டுக்கல் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு: குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை