வேடசந்தூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பிடிபட்ட 3 அடி நீள நாகம் திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதால் தற்போது புதிய கட்டடத்திற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இன்று (ஜூலை 24) அங்கு பணியாற்றிய ஒருவர் கட்டுமானத்திற்குத் தேவையான பலகையை எடுத்துக் கொண்டிருந்த பொழுது பலகையின் அடியே நாகம் பதுங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரமாகப் போராடி 3 அடி நீளமுள்ள நாகத்தை உயிருடன் பிடித்தனர். அதன் பின் பிடிபட்ட நாகத்தை சாக்கு பையில் போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் நாகம் புகுந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:ஊருக்குள் செல்ல மறுக்கும் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள்... காரணம் என்ன?