இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "வெளிமாநிலங்களுக்கு சென்று திண்டுக்கல் திரும்பிய நபர்களின் பயண விவரங்களின் அடிப்படையில், கரோனா அறிகுறி உள்ள நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் 17 நபர்களுக்கு கரோனா பெருந்தொற்று உறுதியானது. இதில், திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த 9 நபர்கள், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள், நிலக்கோட்டை கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த இரண்டு நபர்கள், திண்டுக்கல் தோமையார்புரம் கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் 17 நபர்களுக்கு கரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 17 பேருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதனிடையே, கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், அருகாமையில் வசிப்பவர்களுக்கும் கரோனா பெருந்தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது. ஆகையால், இந்தப் பகுதியில் மக்கள் அவசியமின்றி நடமாடுவதை தவிர்க்க வேண்டும். இந்த ஆய்விற்குத் தேவையான விவரங்களை அரசு அலுவலர்களுக்கு, மக்கள் தாமாக முன்வந்து வழங்கவேண்டும். அப்போதுதான் சமூக பரவலைத் தடுக்க முடியும். குறிப்பாக, பேகம்பூர் பகுதியில் அதிக எண்ணிக்கையில் பெருந்தொற்று பரவியுள்ளதால் வாகனங்கள் மூலம் காய்கறிகள் வழங்கப்படும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.