கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி இன்று (நவ. 05) அரூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலாவிடம் தனது குழந்தையுடன் சென்றுகணவாின் குடும்பத்தினா் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகப் புகார் மனு அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், "தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலைப் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் என்பவரின் மகன் பாபுவுக்கும் எனக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
பத்து மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவர் பாபு, மாமியார் லட்சுமி, நாத்தனார் கோமதி, கணவரின் அண்ணன் உள்ளிட்ட நான்கு பேரும் பணம், நகை கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்துவருகின்றனர்.
கடந்த மூன்றாம் தேதி மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில் அடித்து துன்புறுத்தி பிள்ளையைப் பிடிங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றினர்.
பின்னர் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துவைத்த பின்பு மீண்டும் இன்று காலை 7 மணி அளவில் நான் அணிந்திருந்த தாலி, கால் கொலுசு உள்ளிட்டவற்றைப் பிடிங்கிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே துரத்திவிட்டனா்.
வரதட்சணை என்ற பெயரில் பணம் நகை கேட்டு என்னை வெளியேற்றி எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க என்னுடைய கணவர் குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.
எனவே இந்த நான்கு நபர்களையும் விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை என்னுடன் சேர்த்துவைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.