தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து இன்று 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து 28 ஆயிரம் கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு - பரிசல் இயக்க தடை
தருமபுரி: காவிரியிலிருந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கபினி அணையிலிருந்து இன்று 30 ஆயிரம் கனஅடி, கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி என காவிரி ஆற்றில் மொத்தம் 54 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரிநீர் நாளை தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், 29ஆவது நாளாக ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த சில தினங்களாக கோத்திகல் பாறையிலிருந்து பரிசல் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் சென்று ஒகேனக்கல் மெயின் அருவியை பார்த்து ரசித்தனர். தற்போது மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.