தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையை சேதப்படுத்தி உள்ளனர். அப்போது, வகுப்பறையில் மாணவ, மாணவிகள் அமர பயன்படுத்தும் பெஞ்ச் மற்றும் டேபிள் போன்றவற்றை கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த வீடியோவில் மாணவர்கள் பெஞ்ச், டெஸ்க்கு போன்றவற்றை அடித்து உடைப்பதும், மாணவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் வகையில் மாணவிகளும் சேர்ந்து அவற்றை உடைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு முடிந்த நிலையில், இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் பள்ளிக் கல்வி முடிந்தது என்பதை கொண்டாடும் வகையில், வகுப்பறையில் உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. வழக்கமாக பள்ளி ஆண்டு முடியும் பொழுது மாணவ, மாணவிகள் அவரவர்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பேனாவின் மையை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும், தண்ணீர் ஊற்றியும் கொண்டாடுவார்கள் அதைத்தான் பலர் செய்திருப்பார்கள். ஆனால், இந்த பள்ளி மாணவர்கள் நேர்மாறாக வகுப்பறையை சூறையாடி வன்முறையில் ஈடுபடுவது போல கொண்டாடி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அரசு கல்லூரி தேர்வு கட்டணம் உயர்வு.. கும்பகோணத்தில் மாணவர்கள் போராட்டம்!
இவ்வாறு அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பள்ளியில் படிக்கும் மற்ற மாணவா்களின் பெற்றோர்கள் வேண்டுகோளாக உள்ளது. அரசு பள்ளிகளில் மேஜைகளை உடைத்ததால் அடுத்த கல்வி ஆண்டு வரும் மாணவர்களுக்கு அமர மேஜை பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தரையில் அமரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பள்ளிகளுக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை செய்து வரும் இந்த சூழலில் இப்படி பட்ட சம்பவங்கள் நிகழ்வது அனைவரின் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இப்படியான செயல்கள் இனி பள்ளியில் பயிலும் மாணவர்கள் இடையே நடக்கக்கூடாது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருங்காலத்தில் முன்னுதாரணமாக அமைந்து மற்ற மாணவர்களின் செயல்களை கொடுத்து விடும். ஆகவே, இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பள்ளியில் ஏற்கனவே இது போன்று இரண்டு முறை சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும் முறையான நடவடிக்கை எடுக்காததால் அதே போன்ற சம்பவம் மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சொல்லப்போனால், இந்த பள்ளிக்கு அருகே கஞ்சா விற்பனையும் நடைபெறுவதாகவும், பள்ளியின் பல மாணவர்கள் கஞ்சா வாங்கி பயன்படுத்திவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "ஐஐடிக்கு செல்ல விரும்பினால் நாட்டை காப்பது யார்?" - ராணுவ பயிற்சி இளம்பெண் சோனியா!