புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்தது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக மாயனூரிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 1,971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மேளா தாளங்களுடன் ஊர்வலமாக வந்து தமிழ்நாடு எல்லையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். கர்நாடக மாநில காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கர்நாடக காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் வாட்டாள் நாகராஜ் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டார்.
வாட்டாள் நாகராஜ் போராட்டம் முன்னதாக செய்தியாளரிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் ஏழு ஆயிரம் கோடி அறிவித்துள்ளார். பின்னர் 25 ஆயிரம் கோடி தர உள்ளார். இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, குடிநீர் திட்ட அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதுவும் தெரியவில்லை. அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
பெங்களூர் ராம்நகர் சிக்பளாபூர் , தொட்ட பளப்பூர், கோலார் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் இல்லை. ஆனால் 118 கிலோ மீட்டர் தமிழ்நாட்டில் கால்வாய் அமைக்க அனுமதி அளித்தும், பணம் தருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இதனை கர்நாடக முதலமைச்சர் தடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பிப்ரவரி 27ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு நடத்தப்படும். வரும் பிப்ரவரி 27ஆம் தேதி கன்னட கூட்டமைப்பு சார்பில் கூட்டம் கூடி கர்நாடக மாநிலம் முழுவதும் ‘பந்த்’ நடத்த தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு எல்லைக்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது