கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி வட்டத்திற்குட்பட்டது உடுப்பிநாயகணப்பள்ளி கிராமம். இங்கு 120 வீடுகளில் 500க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சுமார் 310 வாக்காளர்களைக் கொண்ட இந்த கிராமம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல 1.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சரியான சாலை வசதியில்லை. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் வருவதில்லை.
மலைக்கிராமம் என்பதால் இங்கு மருத்துவ வசதியும் போதுமான அளவில் இல்லை. பாம்பு கடி, கர்ப்பிணியின் பிரசவ வலி உள்ளிட்ட ஆபத்தான நேரங்களிலும் உரிய நேரத்திற்கு எவரையும் அழைத்துச் செல்ல முடியாமல் கிராமத்தினர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், கடந்த 40 ஆண்டுகளாக உள்ளாட்சி, நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகள், தேர்தலுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக, எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து வீடுகளின் மீது கருப்புக்கொடிகளை தற்போது ஏற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, சாலை வசதி செய்து தராத அலுவலர்களைக் கண்டித்து, சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிபெயரும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக பெண்கள், சிறுவர்கள் என குடும்பத்துடன் வந்த கிராமத்தினர், அடுப்பு கூட்டி விறகிட்டு சமையல் ஏற்பாடுகளைத் தொடங்கினர். தொடர்ந்து, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கிராம மக்களுக்கு உத்தரவாதம் அளித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட உடுப்பிநாயகணப்பள்ளி கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:’பட்டாசு தொழிலாளர் நலன் காக்க தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்' - எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்எல்ஏ வாக்குறுதி