தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் திண்டல் அருகேயுள்ள பிச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன், நதியா தம்பதியர். இவர்கள் பத்தாண்டுகளாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மாரியப்பனுக்கு லாரி ஓட்டும் தொழில்.
இந்நிலையில், மாரியப்பனின் மனைவி நதியாவும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் நெருங்கி பழகியுள்ளனர். தொடர்ச்சியாக, மாரியப்பன் அந்த இளைஞருடன் பேசுவதைத் தவிர்க்கக் கோரி நதியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களிடையே கடந்த மூன்று ஆண்டுகளாக பிரச்னை இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று வீட்டில் வெளியே கட்டில் மீது உறங்கிக்கொண்டிருந்த மாரியப்பன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அருகாமை வீட்டார்கள் காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மர்மமான முறையில் உயிரிழந்த மாரியப்பனின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருப்பதாகவும், இதனால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முதியவரை கத்தியால் குத்திய இளைஞர்: காவல் நிலையத்தில் சரண்!