தருமபுரியானது விவசாயம் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான மாரண்ட அள்ளி, வெள்ளிச்சந்தை, பேகாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
குறுகிய காலப் பயிரான தக்காளி, பொதுவாக நல்ல விளைச்சல் நேரத்தில் விலையில்லாமல் போவது இயல்பானதாக மாறிவிட்டது. இதனால் தக்காளி பறிக்கப்படாமல் செடியிலேயே காய்த்து தொங்கிய காலமும் உண்டு. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றினால் ஏற்பட்ட பொது ஊரடங்கு காரணமாக தக்காளியானது ஏற்றுமதி செய்யப்படாததாலும், தண்ணீா் பற்றாக்குறை காரணமாகவும் தக்காளி பயிரிடுவதைக் குறைத்த விவசாயிகள், மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டனர்.
'வரத்து குறைவு, வரவு அதிகம்' - களைப்புக்கு மத்தியிலும் களிப்பு மேலும் நிலக்கடலை சாகுபடிக்கு குறைந்த செலவும், உறுதியான விலையும் கிடைக்கும் என்பதால் தக்காளி சாகுபடியைக் கைவிட்டனர். ஆனால் தற்போது தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்னதாக செப்டம்பர், நவம்பர் மாதங்களில் தக்காளி வரத்தானது நாளொன்றுக்கு 150 டன் வரை தருமபுரியில் இருந்து ஏற்றுமதியாகிய நிலையில், தற்போது வரத்து குறைவு காரணமாக 100 டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், பாலக்கோடு சுற்றுப்புற விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளிப் பழங்களை பாலக்கோடு நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்குக் கொண்டுச் செல்கின்றனர். இங்குப் பழங்கள் தனித்தனியாக தரம் பிரித்து, பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு, அவைகள் அனைத்தும் திருச்சி, நாமக்கல்,தஞ்சாவூர், திருவாரூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைகளில் அரைக்கிலோ அளவு தக்காளி கேட்டால்... ‘கிலோவே 5 ரூபாய்தான். ஒரு கிலோவா வாங்கிக்கோங்க’ என்று வியாபாரிகள் சொன்னது தற்போது மாறி விட்டது. கடந்த 3 மாதங்களாக 30 கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது விவசாயிகளிடமிருந்தே கிலோ 28 முதல் 34 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
தக்காளி சாகுபடி செய்த பரப்பளவு குறைந்ததன் காரணமாகவும், பூச்சிகளின் தாகுக்குதலினாலும், சந்தைக்கு வரக்கூடிய தக்காளி வரத்தானது குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி வரத்து குறைவு காரணமாகத் தக்காளியின் விலை கூடியுள்ளது. இந்த வரவும் மகிழ்ச்சியும் நிரந்தரமில்லைதான். ஆனால் விலை குறைவால் சந்தித்த பெரும் இழப்புகளுக்கு மத்தியில் கிடைத்திருக்ககூடிய ஓரளவு வருமானம் களைப்படைந்த விவசாயியை களிப்படைய செய்துள்ளது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க:172 நாள்களுக்கு பின் திறக்கப்பட்ட ஊட்டி பூங்காக்கள்!