தருமபுரியில் பாஜக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரியும் திமுகவின் 130 நாள்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று. 23.ம் புலிகேசி படத்தை யாராவது பார்க்கவில்லை என்றால் சட்டப்பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதைக் பார்த்தலே போதும்.
'மன்னா மன்னா உங்களை இப்படிப் புகழ்ராங்களே மன்னா!' - மக்களின் பிரச்சினைகளைப் பேசாத அவையாக இல்லாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் புகழ்கின்ற அவையாக வைத்துக்கொண்டு காலையிலிருந்து இரவு வரை 23.ம் புலிகேசி படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்று இருக்கிறது.
23.ம் புலிகேசி படத்தில் வரும் வடிவேலுவுக்குப் பக்கத்திலிருக்கும் புகழ்பெற்ற மனிதனாக தர்மபுரி எம்பி இருக்கின்றார். இங்கிருக்கின்ற அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவது பாஜக தொண்டர்களின் கடமை. நீட் விவகாரத்தில் ஒப்புக்குச் சப்பானிபோல அங்கே இருப்பவர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கல்வித் தந்தைகளாகக் கல்லூரியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நீட் வருவதற்கு முன்பு ஒரு சீட் ஐந்து கோடி, 10 கோடி என விற்று அதன்மூலம் லாபம் பெற்றவர்கள். நீட் மூலமாக இதனைச் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் நீட்டை எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை அனைத்து மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.
உழவர்கள் உழைத்து உழைத்து தேய்ந்துவருகின்றனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும்விதமாக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதை எதிர்க்கும் தலைவர்கள் நேரடியாக யாரும் வேளாண்மையில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்கு வேளாண் குறித்து தெரியாது. இடைத்தரகர்களிடம் சிக்கித் தவித்துவரும் உழவர்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்களை முன்னேற்றுவதற்கும் புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.