தர்மபுரி:கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட காவிரி உபரி நீர், கடந்த மூன்று தினங்களுக்கு முன் தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
இதன் நீர்வரத்து தொடக்கத்தில் 25,000 கன அடியாக இருந்தது. படிப்படியாக உயர்ந்து நேற்று (ஜூலை 12) நீர்வரத்து ஒரு லட்சத்து 15,000 கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தடை விதித்தார்.