தர்மபுரி:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இந்த ஆண்டு முதன்முறையாக நீர்வரத்து ஒரு லட்சத்து 20ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்கனமழையின் காரணமாக, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று (ஜூலை 15) மாலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 85ஆயிரத்து 177 கனஅடி நீரும்; கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. காவிரி கரையோரப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு 3ஆவது நாளாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜூலை 16) காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 20ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பகுதி வெள்ளமாக காட்சியளிக்கப்படுகிறது.
ஒகேனக்கல் பகுதியை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஒகேனக்கலில் குளிக்க மற்றும் பரிசில் இயக்க ஆறாவது நாளாக தடை தொடர்கிறது. ஒகேனக்கல் பகுதியில் அருவிகளை மூழ்கடித்து தண்ணீர் பரந்து விரிந்துசெல்கிறது.
ஒகேனக்கலில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு! இதையும் படிங்க: 42-ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது மேட்டூர் அணை