தருமபுரி:தமிழக அளவில் மஞ்சப்பை விருதில் முதலிடம் பெற்ற தனியார் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் தருமபுரியில் ஏரியில் சிறுவர் பூங்கா அமைத்து, அதனை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டார்.
இதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும், சிறந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சிறந்த பள்ளிகள் 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் மூன்று சிறந்த வணிக வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூபாய் 10 லட்சமும், இரண்டாம் பரிசாக 5 இலட்சமும், மூன்றாம் பரிசாக மூன்று லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை தங்களது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் தூய்மையாக பராமரித்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், பேரூராட்சிகள், பள்ளிக் கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் 5000 மஞ்சப்பைகளை விநியோகம் செய்து, பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்துள்ளனர்.