தருமபுரி:காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 48 ஆயிரம் கன அடியும், கபினி அணைக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாகவும், கபினி அணையின் நீர்மட்டம் 81 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் இரண்டு அணைகளில் இருந்து நீர் திறப்பு என்பது விநாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை(ஜூலை 22) மாலை கபினியில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 2 ஆயிரத்து 400 கன அடியும் என மொத்தம் காவிரி ஆற்றில் விநாடிக்கு 4 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால், நீர் திறப்பு என்பது, விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி, 12,000 கன அடி என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்று மாலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.