பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தருமபுரி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நாடாளுமன்ற தேர்தலில் பாமக கூட்டணி குறித்து வரும் தகவல்கள் பொய்யானது. செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மட்டுமே தெரிவித்தேன். யாருடன் கூட்டணி, எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரிவிக்கவில்லை.
சில ஊடகங்களில் திமுகவுடன் கூட்டணி என்றும், சில ஊடகங்கள் அதிமுகவுடன் கூட்டணி என்றும், எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நானோ, மருத்துவர் ராமதாஸோ, எங்கள் கட்சியை சார்ந்தவர்களோ கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத பட்சத்தில் எங்களிடம் உறுதிப்படுத்தாமல் தயவுசெய்து கூட்டணி குறித்து செய்தி போடாதீர்கள். அப்படியே போட்டீர்கள் என்றால் உங்களுடைய பத்திரிகை மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்.
ஊடகங்களுக்கு தர்மம், நியாயம் என்பது இருக்கிறது. ஒரு சில ஊடகங்கள் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு தரகர்களாக செயல்படுவதாக நாங்கள் நினைக்கிறோம்", என்றார்.