அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி தருமபுரி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஆகஸ்ட். 12) காலை சேலத்தில் நடைபெற்ற பள்ளி செயல்பட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டு பள்ளிகள் செயல்பட அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இதையும் படிங்க:பெண்ணுடன் தனிமையில் இருந்தவரை மிரட்டி பணம், நகைகள் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது!
இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும் பொழுது திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டார். மேலும் லேசான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தற்போது தனியார் மருத்துவமனையிலேயே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அமைச்சர் சக்கரபாணி, திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோர் உள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜியின் பதிலில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை - அமலாக்கத்துறை தகவல்!