தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் பொதுமக்கள் அவதி...

தருமபுரி: அரூர் அருகே தலைமுறை தலைமுறையாக மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் விவசாய நிலங்களில் சடலங்களை எடுத்துச் செல்லும் கிராம மக்கள்-மயானத்திற்கு செல்ல சாலை அமைத்துக் கொடுக்க அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

crematorium
crematorium

By

Published : Nov 30, 2019, 8:51 AM IST

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஜம்மனஹள்ளி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் மயானம் அமைக்கப்பட்டது.

இந்த கிராமத்தில் உள்ளவர்கள் யாரேனும் உயிரிழந்தால் இந்த மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர். இந்த மயானத்திற்கு செல்ல ஆரம்ப காலத்தில் சாலைவசதி இருந்துவந்தது. நாளடைவில் அந்த சாலைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் விவசாயம் செய்யும் பொழுது ஒற்றையடிப்பாதை வரை சுருக்கி விவசாயம் செய்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றர்.

இந்நிலையில் இந்த கிராமத்தில் உயிர் இழப்புகள் ஏற்படும் நேரங்களில் சடலங்களை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது, விவசாய நிலங்களில் வழியாகவே எடுத்துச்செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த நிலங்களில் பயிர் சாகுபடி செய்திருந்தால்கூட சடலங்களை எடுத்துச் செல்வதற்கு அந்த நிலத்தின் உரிமையாளர்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.

சில நேரங்களில் நெல், மரவள்ளி, ராகி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருக்கும் நேரத்தில்கூட, கிராம மக்கள் சடலங்களை அந்த வயல்களில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் விவசாயமும் பெருமளவு பாதிப்புக்குள்ளாவதால் பல தலைமுறைகளை கடந்தும் பாதை வசதி இல்லாத மயானத்திற்கு, பாதை அமைத்து தர கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், அந்தக் கிராமத்திலுள்ள வேடியப்பன் மனைவி பட்டம்மாள் என்பவர் உயிரிழந்தார். அவரது சடலத்தை கிராம மக்கள் நெல், மரவள்ளி பயிரிடப்பட்டுள்ள வயல்களில் நுழைந்து எடுத்துச் சென்றனர். அப்போது நெற்பயிர், மரவள்ளி செடிகளும் உடைந்து நாசமாகின.

எனவே, தங்கள் கிராமத்தில் உள்ள மயான இடத்தை உரிய முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடத்தையும் மீட்டுத்தர வேண்டும். அதேபோல் மயானத்திற்கு செல்ல பாதையை ஏற்படுத்தி தரவேண்டும். இல்லையெனில், கிராமத்திற்கு அருகில் வேறு இடத்தில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் இருப்பதால், அந்த பகுதிக்கு மயானத்தை மாற்றிக் கொடுத்தால் வசதியாக இருக்கும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப்பைதொடர்பு கொண்டு கேட்டபோது,

ஜம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதை, அரசு புறம்போக்கு நிலமா அல்லது தனிப்பட்டவருக்கு சொந்தமான பட்டா நிலமா என்பது முதலில் ஆய்வு செய்யப்படும். ஒருவேளை மயான பாதை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்திற்கு தேவையான சாலை ஏற்படுத்தி தரப்படும். ஆனால் கிராம மக்கள் கேட்பதை போல, வேறு இடத்தில் மயானம் அமைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் ஒரு சமூகத்திற்கு தனியாக மயானம் அமைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இருக்கின்ற மயானத்திற்கு தேவையான பாதையை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் சார்பில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை: நீதிபதி திங்ராவின் அறிக்கை முக்கிய பங்காற்றுமா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details