விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் - விநாயகர் சதுர்த்தி
தர்மபுரி : விநாயகர் சதுர்த்திக்கு அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கையுடன் விநாயகர் சிலையை தயாரிப்பதாக சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி சளுலூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருபது பேர் குடும்பத்துடன் தங்கி விநாயகர் சிலையை தயாரித்து வருகின்றனர். 50 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய்வரை உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.
இவர்கள் ஒரு அடி முதல் 10 அடி உயரம் கொண்ட சிலைகள் சாக்பீஸ் மாவு கலவை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சிலைகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதுகுறித்து அர்ஜுன் என்பவர் கூறுகையில், ”சென்ற ஆண்டு கரோனா முதல் அலை பாதிப்பு காரணமாக விநாயகர் பண்டிகையை கொண்டாட தடை விதிக்கப்பட்டதால் சிலைகள் விற்பனையாகாமல் கடும் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கையில் சிலைகள் தயாரிப்பு பணியில் தீவிரமாக இரவு பகலாக ஈடுபட்டுவருகிறோம்.
சென்ற ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சிலைகள் விற்பனையாகாமல் வீணானது. கடன் வாங்கி முதலீடு செய்ததால் இப்போதுவரை வட்டி கட்டி வருகிறோம்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கையில் குடும்பத்துடன் சிலையை தயாரித்து விற்பனைக்கு வைத்திருக்கிறோம்” என்றார்.