தர்மபுரி:சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பாமக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் நபர்கள் குறித்த, இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலின்படி, பாமக தலைவர் கோ.க.மணி என்ற ஜி.கே. மணி பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவது தெரியவந்துள்ளது. இவர் பாமக சார்பில் மூன்றாவது முறையாக பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
எம்.ஏ. பட்டதாரியான இவர் முழு நேர அரசியல் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி. 1983ஆம் ஆண்டு மேட்டூர் கொளத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் கொளத்தூர் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், 1991இல் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து 1996, 2001ஆம் ஆண்டுகளில் பென்னாகரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2006ஆம் ஆண்டில் மேட்டூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டில் மேட்டூரில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அடுத்ததாக, 2014ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் போட்டியிட்டும் தோல்வியடைந்தார். தற்போது தொடர்ந்து இருமுறை அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த பென்னாகரம் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார்.