தருமபுரி அடுத்த தடங்கம், ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட ஒட்டப்பட்டி, என்.ஜி.ஓ.காலனி, டிரைவர்ஸ் காலனி, பி.டபுள்யூ காலனி, தேங்காய் மரத்துப்பட்டி, முத்துமாரியம்மன் கோயில், ஜீவாநகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் கேட்டு காலை ஏழு மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தினால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் பாதிக்கபட்டனர்.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகோரி பொதுமக்கள் சாலை மறியல்! - தர்மபுரி
தருமபுரி: குடிநீர் கேட்டு இரண்டு கிராம பஞ்சாயத்து மக்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாகபஞ்சாயத்தில்தண்ணீர் விடுவதில்லை. இதுகுறித்து, பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் பயனில்லை. குடிநீர் விலைக்கு வாங்கும் அவல நிலை தொடர்கிறது. மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் பலனில்லை. ஆகவே, தற்போதாவது குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்துவைத்தனர்.
அதேபகுதியில், அருகில் உள்ள நேரு நகரில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கும் குடிநீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரசு கலைக்கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், உதவி திட்ட இயக்குநர் ரவிசங்கர் நாத், மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்று காலையே இருவேறு இடங்களில் நடந்த சாலை மறியலால் வாகனங்கள் நீண்ட தூரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.