தர்மபுரி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கடந்தாண்டு முதலே தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி பயின்றுவருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்களை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது.
கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர். தர்மபுரி நகர்ப் பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் பலர் இந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகர்
அவ்வையார் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழு உருவாக்கி மாணவிகளுக்குப் பாடங்களைக் கற்பித்துவருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இன்று என்ன பாடம் நடத்தப்பட உள்ளது என்பது குறித்த குறிப்பை மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்புகின்றனர்.