தருமபுரி:தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2 அலகு திட்டத்திற்கு ஜப்பான் நிதி உதவி உடன் ரூ.7,386 கோடி மதிப்பில் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முந்தைய திமுகவின் ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தபோது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் முதலாம் கட்டம் தொடங்கப்பட்டது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மக்கள் தொகை மற்றும் தொழில் பெருக்கத்தின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அத்துடன் இந்த இரண்டு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் ஒகேனக்கல் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். மேலும் இதன் தொடர் நடவடிக்கையாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் சந்தித்து வலியுறுத்தி வந்தார்.
2021ஆம் ஆண்டு தருமபுரிக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் இரண்டாம் அலகு (2nd phase of Hogenakkal Integrated Drinking Water Project) தொடங்க வேண்டும் என கடிதம் அளித்து கோரிக்கை வைத்தார். தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்காக ரூ.7,145 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்.
காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுக்க ஒப்புதல்:இத்திட்டம் தொலைநோக்கு நடவடிக்கையாக, 2054 ஆம் ஆண்டு இல் உள்ள மக்கள்தொகை பெருக்கத்தை மனதில் வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 44 லட்சம் பொதுமக்கள் பயனடைவார்கள். இத்திட்டத்திற்காக பென்னாகரம் பகுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் முதன்மை சமநிலை நீர்த்தேக்க மையம் அமைப்பதற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளன. ஒகேனக்கல் கூட்டு குடிநீா் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து 304 எம்எல்டி தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.7,386 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்புதல்: இந்நிலையில் இந்த திட்டத்தில், தற்போதைய திட்ட மதிப்பீடு ரூ.7,386 கோடி என்றும், இதில் நகர பங்கீடு ரூ.2,232 கோடி, கிராம பங்கீடு ரூ.4,470 கோடி தொழில்துறை பங்கீடு ரூ.682 கோடி என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பொருளாதார உதவிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ஓசூர் மாநகராட்சி, 16 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,802 கிராமப்புற குடியிருப்புக்கள் பயன்பெறும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள்; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை!