தருமபுரி: மக்கள் பயன்பாட்டிற்காக தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாய் ஒதுகப்பட்டுள்ளது என, தருமபுரி ரயில் நிலையத்தை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “தருமபுரி ரயில் நிலையத்தில் 2004ஆம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்கு பின்பு பெரிய அளவில் நடைமேடை நவீனப்படுத்தப்படவில்லை. தற்போது மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 கோடி தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கி உள்ளது. மக்களவை உறுப்பினர் என்ற முறையில், தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்திற்கு அருகில் 400 மோட்டார் சைக்கிள்கள், 50 கார் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. கான்கிரீட் தரைப்பாலம், மூன்று பயணிகள் காத்திருப்பு இடங்கள், குடிநீர் வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நடைமேடை, நவீன அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.