பிரசவத்திற்குப் பிறகு 3 தாய்மார்கள் உயிரிந்தது குறித்து விரிவான அறிக்கை தர தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் வலியுறுத்தல் தருமபுரி:தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு கடந்த சில தினங்களில் 3 தாய்மார்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவமனையில் இன்று (அக்.16) ஆய்வு மேற்கொண்ட தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தாய்மார்களின் உயிரிழப்பு சம்பந்தமாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்வின் போது, அங்கு பணியில் இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் பிரசவித்த தாய்மார்கள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விரிவாக அறிக்கை அளிக்கவேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் பிரசவித்த தாய்மார்கள் உயிரிழப்பு ஏற்படாத வகையில் சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிராமப்புறங்களில் இருந்து வருவோரை அலைக்கழிப்பதாகவும் பலரையும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், அரசு மருத்துவமனைக்கும் மாறி மாறி அனுப்பப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேல்வியெழுப்பினார்.
அதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற வரும் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மருத்துவா்களிடம் வலியுறுத்தினார். பிரசவத்திற்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பேருந்துக்கு காத்திருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூவர் பலி.. திருப்பூர் அருகே நிகழ்ந்த சோகம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!