தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து தர்மபுரியில் நான்காம் ஆண்டு புத்தகத்திருவிழாவை, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று(ஜூன் 24) தொடங்கியது. புத்தகத் திருவிழாவை வேளாண்மை மற்றும் உழவர்நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
புத்தகத்திருவிழா ஜூன் 24 முதல் ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 100 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக வர உள்ளன. இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்ற 10 நாட்களும் மாலை நேரங்களில் அறிவு சார் அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,' எனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. படிக்கும் காலத்திலேயே ஒழுங்காக படிக்கவில்லை. ஆனாலும் ஸ்ட்ராங்காக படித்தேன். படிக்கும் பொழுது சோதனை ஏற்பட்டாலும் திருமண வயதில் படிப்பை முடித்தேன். என் படிப்புக்கு அடித்தளம் அதிகம். நான் பதினொன்றாம் வகுப்பு, பியூசி, பட்டப்படிப்பை எத்தனை ஆண்டுகள் படித்தேன் என்று எனக்குத்தான் தெரியும்.
இது தான் படிப்பில் இடைநிற்றல். நான் மனச் சோர்வு அடையாமல் வைராக்கியமாக படித்து பிஎஸ்சி முடித்து, பி.எல் படித்தேன். டாக்டராக வேண்டும் என்பது கனவு. மனதில் வலி இருந்ததால் டாக்டர்களுக்கெல்லாம் மந்திரியாகக் கூடிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றினேன். எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஆகி டாக்டர்களுக்குப் பட்டம் வழங்கினேன்.