தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"3 மாநில தோல்வியை பின்னடைவாக கருதவில்லை" - கே.எஸ்.அழகிரி - KS Alagiri press meet

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நேற்று (டிச.11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தருமபுரியில் பேட்டி
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தருமபுரியில் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 12:22 PM IST

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தருமபுரியில் பேட்டி

தருமபுரி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நேற்று (டிச.11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, "காஷ்மீர் மாநிலத்தை 370-வது அரசியல் திருத்த நீக்கத்தைப் பற்றியும், அந்த மாநிலத்தை சிறு சிறு துண்டுகளாக மூன்றாக பிரித்தது பற்றியும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல். ஆனால், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு ரயில்வே அமைச்சர் அவரது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்தும், பாரதிய ஜனதா வாய் திறக்கவில்லை. காரணம், அவர்கள் சர்வதிகாரிகள். எல்லா அமைப்புகளையும் அழித்து வருகிறார்கள்.

மம்தா பானர்ஜி கட்சியின் எம்பி ஒருவரை நீக்கம் செய்திருக்கிறார்கள். காரணம் அதானி பற்றியும், அதானி கம்பெனியைப் பற்றியும் கேள்வி எழுப்பியதனால். அவர் ஒன்றும் தேசத்திற்கு துரோகமிழைக்கவில்லை. தேசத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவில்லை.

அதானியைப் பற்றி பேசினாலே நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவோம் என்ற நிலைக்கு மோடி சென்று இருக்கிறார். மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள், அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் அதிக வாக்குகள் வாங்கியுள்ளது.

முந்தைய வேளைகளை விட 40 சதவீதம் அதிகமாக வாங்கி இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கையிலும் நாங்கள் அதிகம் எடுத்துள்ளோம். மக்கள் மனதில் ராகுல் காந்தி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி சிம்ம சொப்பனமாக திகழ்வதற்கு இது ஒன்றே சான்று. 2002-இல் இதே போன்ற நிகழ்வு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் நிகழ்ந்தது.

அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட மூன்று மாநிலங்களில் அதிகளவில் வாக்குகள் பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சரியாக கையாண்டு உள்ளது. 17 மணி நேரம் புயல் சென்னை நகரத்திற்கு மேலே சுழன்று வந்திருக்கிறது. மேக வெடிப்பு போல வெடித்து மழை நீர் பொழிந்து இருக்கிறது. எந்த ஒரு நிர்வாகத்தாலும், இத்தகைய அளவு தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியாது. ஆனாலும், அரசாங்கம் நன்றாக செயல்பட்டு இருக்கிறது. அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களால் இயன்ற காரியத்தை செய்திருக்கிறார்கள்.

விமர்சிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்கள்தான். இயற்கைப் பேரிடரை எந்த ஒரு நிர்வாகமும் உடனடியாக சரி செய்ய முடியாது. இது மனித குற்றம் அல்ல, இயற்கை செய்திருக்கின்ற பெரிய செயல். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மழை தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்க இருப்பது பாராட்டுக்குரியது. மனிதாபிமான நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் இதனை செய்திருக்கிறார். அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஓ.பி.சி தலைவர் அஜய் சிங் யாதவ், தருமபுரி முன்னாள் எம்பியும், காங்கிரஸ் மாவட்டச் செயலாளருமான தீர்த்த ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:"16ஆம் தேதி முதல் வெள்ள நிவாரண டோக்கன்" - தங்கம் தென்னரசு தகவல்

ABOUT THE AUTHOR

...view details