தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிட்டேசம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மேய்ச்சல் நிலம் உள்ளது. இதில் சில ஏக்கர் நிலத்தை கணபதி மகன்கள் கோவிந்தசாமி, சின்னசாமி, மாயக்கண்ணன், தேவராஜ் ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. நிலப் பிரச்னை தொடர்பான வழக்கு பாலக்கோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, மேய்ச்சல் புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற காரிமங்கலம் தாசில்தார் கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் தாரணி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுடன் காவல்துறையினருடன் ஜேசிபி டிராக்டர் போன்ற வாகனங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர்.
அப்போது, நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களுக்கும் அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் விவசாயி சின்னசாமி (65) திடீரென அலுவலர்கள் முன்னிலையில் தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயி ஒருவர் அலுவலர்கள் முன்னிலையில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் அலுவலர்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:கரோனா: விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு