தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது மனுதர்ம யோஜனா திட்டம்” - கி.வீரமணி சாடல்! - நீட் தேர்வு

K.Veeramani press meet in Dharmapuri: மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது மனுதர்ம யோஜனா திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

Dravidar Kazhagam leader Veeramani press meet
திராவிடர் கழக தலைவர் வீரமணி செய்தியாளரைச் சந்திப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:35 AM IST

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

தருமபுரி: அரூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளரைச் சந்தித்துக் கூறுகையில், ‘பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் மூலம் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவி கொடுக்க வேண்டுமே தவிர குரு, சிஷ்யன் என்ற முறையில் தகப்பனிடம் இருந்து பிள்ளைகள் குலத்தொழிலை செய்ய வேண்டும் என வழங்கக்கூடாது.

குறிப்பாக, இந்த திட்டத்திலேயே செருப்பு தைப்பவர்கள் போல் படங்களை போட்டு இருக்கிறார்கள். இவர்களது பிள்ளைகள் எல்லாம் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சென்று ஐஏஎஸ் அதிகாரிகளாகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் செல்லக் கூடாது என்பதற்காக, 18 வயது ஆன பிறகு குலத்தொழில் செய்வதற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு ஒரு லட்சம் நிதி உதவி தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் நாம் ஏமாந்தால், நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள். இந்த திட்டம் மக்களுக்குப் புரியவில்லை. ஒரு லட்சம் கொடுக்கிறார்களே, ஏன் இதை தடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இது விஸ்வகர்மா யோஜனா திட்டம் இல்லை. இது மனுதர்ம யோஜனா திட்டம்.

ஆளுநர் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். பைத்தியம் பிடித்தவர்கள் தொடர்ச்சியாக திரும்ப திரும்ப உளறுவதுபோல ஆளுநர் உளறி வருகிறார். ஏனென்றால் அவர்கள் நம்புவது சாஸ்திரம், சனாதனம் போன்றவை. அந்த மனுதர்ம சாஸ்திரத்திலேயே திராவிடம் என்பது பத்தாவது அத்தியாயத்தில் உள்ளது.

இந்த மனுதர்ம சாஸ்திரத்தில் திராவிடம் என்பது ஆங்கிலேயர் போட்டிருந்தால், 200 ஆண்டுகளுக்கு முன்புதான் வந்திருக்க வேண்டும். இது புராணங்களிலே இருக்கிறது. இதை கால்டுவெல், ஆங்கிலேயர்கள் எழுதினார்களா? இதை வேண்டுமென்றே திரும்ப திரும்ப பேசி வருகின்றனர். மனுதர்மம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மனுதர்மத்திலேயே இந்த திராவிடர்கள் என்ற வார்த்தை இருந்து உள்ளது.

தூங்குகிறவர்களை எழுப்ப முடியும், தூங்குற மாதிரி பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. இப்படியே பேசிப் பேசி, ஆளுநர் தன்னை ஒரு சூப்பர் அரசியல்வாதியாக விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். ஒரே ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப பேசி வருகிறார். ஆளுநரை பரிசோதனை செய்ய வேண்டும். ஆளுநர் பேச பேச திராவிட இயக்க கொள்கைகளுக்கு தினமும் உரம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பூர்வமாக கையெழுத்து வாங்கி வருகிறார்கள். ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களில் தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. சட்டப்பூர்வமாக ஜனநாயகம் செய்யவில்லை என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, வாக்காளர்களுக்கு எடுத்துச் செல்வதற்காக, இவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளித்தோம்.

வன்முறையில் இறங்கவில்லை, ரயிலைக் கொளுத்தவில்லை, சட்டப்பூர்வமாக பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கொடுத்தோம். அவர்கள் செய்யவில்லை என்பதை தெளிவாக மக்கள் உணர்வார்கள். இதற்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே பதில் வரும். நீட், அதானி, அது இது எல்லாமே முடிவுக்கு வரும்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாநகரை மிரட்டும் மாடுகள்.. தொடர் விபத்தால் பொதுமக்கள் அச்சம்.. சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details