தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக காருக்கு பதில் அரசு டிராக்டர் வழங்கலாம்: பாமக தலைவர் அன்புமணி கருத்து - Anbumani Ramadoss

Anbumani Ramadoss: ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக கார் வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் திட்டமிட்டு டிராக்டர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தால் அதன் மூலம் அவருக்கு வருமானம் வரும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக காருக்கு பதில் டிராக்டர் வழங்கலாம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 7:03 PM IST

ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக காருக்கு பதில் டிராக்டர் வழங்கலாம்

தருமபுரி:ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கார் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக விவசாயிகளுக்கு தேவைப்படும் டிராக்டர் உள்ளிட்ட கருவிகளை தமிழக அரசு வழங்கலாம் என இன்று செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. உலகில் தமிழ்நாட்டிற்கு அது சொந்தமான விளையாட்டு. அத்தகைய பாரம்பரியம்மிக்க ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு காரை பரிசாக அறிவிக்கின்றனர். ஒரு விவசாயி, இந்த காரை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார். அவர் வீட்டில் கார் நிறுத்த இடம் இருக்க போவதில்லை.

ஜல்லிக்கட்டில் காருக்கு பதில் டிராக்டர்: அதற்கு பதிலாக அவருக்கு ஒரு 15 லட்ச ரூபாய் மதிப்பில் டிராக்டரையும் விவசாயத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கி தரலாம். அதன் மூலம் அவருக்கு வருமானம் வரும். இதனால் அவரது குடும்பத்திற்கு வருமானம் வரும் சூழல் ஏற்படும். இதனை அரசாங்கம் திட்டமிட்டு செய்ய வேண்டும்.

தொழிலாளர் முதலீட்டு மாநாடு:தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொழிலாளர் முதலீட்டு மாநாடுகளில் எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அதன் மூலம் எவ்வளவு முதலீடுகள் வரப்பெற்றுள்ளது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் அதிக அளவில் முதலீடுகள் இருக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எண்ணமாக உள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும்:சமூக நீதியை நிலைநாட்ட தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பீகார் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இனியும் கணக்கெடுப்பு நடத்த அரசு தாமதித்தால் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும்.

ஸ்டெர்லைட் ஆலையால் 2 லட்சம் பேர் உயிருக்கு ஆபத்து:பத்தாயிரம் பேர் பாதிக்கின்றனர் என்பதை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் அங்குள்ள 2 லட்சம் பேர் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கப்படுவார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடியே இருப்பது தான் நல்லது. இதை நீதிமன்றம் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சட்ட வல்லுநர்களைக் கொண்டு அந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட தடை:தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திறன் சார்ந்த விளையாட்டு என்று கூறி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடையை நீக்கி உள்ளனர். தமிழக அரசு மெத்தனப் போக்கை கைவிட்டு திறமையான வழக்கறிஞர்களை வைத்து மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்:தர்மபுரியில் இருந்து பாலக்கோடு வழியாக பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சுங்க சாவடி அமைப்பதற்கு பதிலாக, முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்.

குளிர் சாதன கிடங்கு:பாலக்கோடு பகுதியில் தக்காளி மற்றும் புளி உற்பத்தி அதிகமாக உள்ளது. தக்காளியை பதப்படுத்தும் வகையில் குளிர் சாதன கிடங்கு இங்கு உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

காவிரி உபரி நீ திட்டம்:தமிழக அரசு காவிரி உபரி நீ திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மாவட்ட வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரிதும் பயன்படும். அனுமதி இல்லாத மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதியை ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு காலங்களில் உபரி நீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு திட்ட அறிவிப்புகள் கூட இல்லை.

சிப்காட் தொழிற்சாலை:பெங்களூர் கோவை இடையே தர்மபுரி ஒரு முக்கிய பொருளாதார மையமாக உள்ளது. இந்த அமைவிடத்தில் சிப்காட் தொழிற்சாலை மிக அவசியமாக தேவைப்படுகிறது. இதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து ஒரு தார் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.

கிடப்பில் உள்ள நீர் பாசன திட்டம்: என்னேகோல் புதூர் தும்பல அள்ளி நீர் பாசன திட்டத்திற்கு கடந்த ஆட்சியில் 275 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், திட்டம் இதுவரை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் இதுவரை ஐந்து முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காலங்களில் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தருமபுரி மாவட்ட விவசாயத்திற்கு பயன்படுத்தி இருக்கலாம்” என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி தாயார் போராட்டத்தில் ஈடுபடும் போது உணவு ஊட்டிய பெண் காவலர்..

ABOUT THE AUTHOR

...view details