தமிழ்நாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் நோக்கில் கடந்த 3 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில், நீர் மேலாண்மை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மண்டல முதன்மை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நீர் மேலாண்மை திட்ட பணிகள் மற்றும் முதலமைச்சரின் குடிமராமத்துப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
348 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோகத்தூர் ஏரியை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அசோகன் பேசுகையில், "முதலமைச்சரின் ஆணைப்படி கடந்த 3 ஆண்டுகளாக மழைநீரைச் சேகரிக்கும் நோக்கில், நீர் மேலாண்மை திட்டப் பணிகளும், குடிமராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் 10 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ. 4 கோடியே 96 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.