தர்மபுரி: கடந்த வாரம் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால், தமிழ்நாடு எல்லைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து, 21 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து 16 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. நீர் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது.