தருமபுரி மாவட்டம் வத்தல்மலை சுற்று வட்டாரப்பகுதியில் சுமார் ஏழு கிராமங்கள் உள்ளன. இம்மலைக்கிராம மக்களுக்கென கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 271 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு இப்பள்ளியையும் விட்டுவைக்கவில்லை. இப்பள்ளியில் இருக்கும் ஆழ்துளை கிணற்றிலும் குறைவான அளவே தண்ணீர் கிடைப்பதால் மாணவ, மாணவியர் குடிநீர் முதற்கொண்டு, கழிவறை பயன்பாடு வரை அனைத்துக்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு கூட தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடி தண்ணீர், பள்ளிக்கு செல்ல ஏதுவான சாலை என அனைத்தும் இப்பள்ளிக்கும், இப்பகுதி மலை கிராம வாசிகளுக்கும் எட்டா கனியாகவே இருக்கிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.