தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவி மீது புகார் மனு ஒன்றை அளித்தனர்.
மகளிர் சுய உதவிக்குழு தலைவி மீது மோசடி புகார்
தருமபுரி: கண்ணுகாரம்பட்டியில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுவில் 9 லட்சம் மோசடி நடந்துள்ளதாக அக்குழுவின் உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கோவிந்தம்மாள் என்பவர் தலைமையில் நான்கு மகளிர் சுய உதவிக்குழுக்களை இயக்கிவருவதாகவும், அதன் உறுப்பினர்களிடம் சேமிப்பு, வங்கியில் பெற்ற கடன் தொகை, சங்க கடன் தொகை ஆகியவற்றை பெற்றுவிட்டு வங்கியில் முறையாகச் செலுத்தாமல் சுமார் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளனர்.
இதன்காரணாக, தங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து கோவிந்தம்மாளிடம் கேட்டபொழுது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளள அவர்கள், கோவிந்தம்மாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.