வாணியாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - வாணியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை
தர்மபுரி: வாணியாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் வாணியாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியான ஏற்காடு மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
அணையின் மொத்த கொள்ளளவு 65.27 அடி. தற்போதைய நீர் இருப்பு 60 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 78.93 கன அடியாக உள்ளது. மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
பருவமழை வெள்ள காலநிலை விதியின்படி அணையின் நீர்மட்டம் 59 அடிக்குமேல் எட்டும்பொழுதும் அணைக்கு நீர்மட்டம் அதிக அளவு வரும்பொழுதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் எந்த நேரத்திலும் அணையிலிருந்து வெளியேற்ற வேண்டியுள்ளது.