தருமபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் பர்கத் (31). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் மாணவர் அணி நகரத் தலைவராக இருந்தவர். அதேபோல, ஓசூர் பழைய வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்வண்ணன் என்ற சிவா (27). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நள்ளிரவில் பார்வதி நகர் என்ற இடத்தில் 15 பேர் கொண்ட கும்பல், இவ்விருவரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், இவர்களது நண்பர் பக்கா பிரகாஷ் என்பவர் தப்பித்து ஓடியதில் உயிர் தப்பி உள்ளார்.
பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஓசூர் நகர காவல் துறையினர், காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தின்போது உயிர் தப்பித்த பக்கா பிரகாஷ் என்பவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், முன்விரோதம் காரணமாக ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த நாகராஜ், முனியப்பா, ராம்நகரைச் சேர்ந்த நவாஸ், சாந்தி நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கனிஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் மற்றும் கூச்சன் உள்ளிட்ட 15 பேர் தங்களை கொலை செய்ய வந்ததாகவும், அப்போது அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தான் மட்டும் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அக்கும்பலினர்தான், தன்னுடைய நண்பர்கள் பர்கத் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரை கொலை செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு கொலை கும்பலை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனிடையே, கன்ஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் (49) என்பவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நீதிமன்றத்தில் 5 பேர் சரண்: இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), உமேஷ் என்ற முபாரக் (26), சீதாராம்மேடு பகுதியைச் சேர்ந்த ஹாபித் (24), அபு (24), நிஜாம் (24) ஆகிய 5 பேரும் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நீதிமன்றத்தில் இன்று (டிச.22) சரண் அடைந்துள்ளனர்.
இதில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), சீதாராம்மேடு பகுதியைச் சார்ந்த ஹாபித் (24) ஆகிய 2 பேர் மட்டும் 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மற்ற மூவரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நவாஷ் மற்றும் ஹாபித் இருவரையும் தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு சீரியல் கொள்ளை... தேனியை கதிகலக்கும் முகமூடி கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை!