தன் மகனின் ஆசைக்காக 3 அடி விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டு இருசக்கர வாகனத்தின் மூலம் தருமபுரியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆற்றில் கரைத்து மகனின் ஆசையை தந்தை நிறைவேற்றியுள்ளார் தருமபுரி:தருமபுரியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது மகன் ஆசைக்காக 3 அடியிலான விநாயகர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு அதனை ஆற்றில் கரைக்க இருசக்கர வாகணத்தில் எடுத்து வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இன்று விநாயகர் சிலை வைத்து மூன்றாம் நாள் வழிபாடு முடிந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியான இருமத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றிலும் சிலைகள் கரைக்கப்பட்டது.
இரண்டு மாவட்டத்தின் எல்லை என்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த பகுதியில் வைத்த விநாயகர் சிலைகளும், தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், நல்லம்பள்ளி, தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வைத்த விநாயகர் சிலைகளும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு இருமத்தூர் தென்பெண்னை ஆற்றில் பூஜை செய்து கரைக்கப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் இங்கு கரைத்தனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: தஞ்சையில் மேளதாளங்களுடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்! திரளான மக்கள் கண்டு ரசித்தனர்!
தருமபுரி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன். இவர் மகன் ஆண்டுதோரும் தன் உண்டியலில் சேர்த்து வைக்கும் பணத்தின் மூலம் சரவணன் தன் மகனுக்கு விநாயகர் சிலை வாங்கிக்கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு சேர்த்து வைத்த பணத்தின் மூலம் இரண்டரை அடி அளவுள்ள சிலையை வாங்கிக்கொடுத்துள்ளார். அதனை வீட்டில் வைத்து வழிபட்டு முரையாக ஆற்றில் எடுத்து சென்று கரைத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு அவர் மகன் 2000 ரூபாய் சேர்த்து வைத்த நிலையில் 3 அடியிலான விநாயகர் சிலையை சரவணன் வாங்கிக்கொடுத்துள்ளார். இதனை வீட்டில் வைத்து வழிபட்ட குடும்பத்தினர் மூன்றாம் நாளான் இன்று அதனை ஆற்றில் கரைக்க எடுத்து வந்துள்ளனர்.
நான்கு சக்கர வாகனத்தில் சிலையை கொண்டு வந்தால் செலவு அதிகமாகும் என்பதால் தனது சூப்பர் எக்ஸெல் இருசக்கர வாகனத்திலேயே முன்புறத்தில் தனது மகனை அமர வைத்து, பின்பக்கத்தில் விநாயகர் சிலையை வைத்து கட்டி எடுத்து வந்துள்ளனர்.
தருமபுரியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இருமத்தூர் ஆற்றங்கரைக்கு கொண்டு வந்து வழிபாடு நடத்தி சிலையை ஆற்றில் கரைத்தனர். மகன் ஆசைக்காக சிலையை வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மகனுடன் சேர்ந்து வந்து தந்தை சிலையை கரைத்து செல்லும் சம்பவம் அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட காவல் துறையினர் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் சோதனை சாவடி அமைத்து விநாயகர் சிலைகளை கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் பயணிக்கும் நபர்கள் குறித்து விவரங்களை பதிவு செய்த பின்பு சாலைகளில் பயணிக்க அனுமதிக்கின்றனர்.
அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் விழிப்புணர்வு எச்சரிக்கை அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வந்தனர். ஆற்றில் பாதுகாப்பாக சிலையை கரைத்து வழிபாடு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக இருமத்தூர் தென்பெண்ணை ஆற்று பகுதியில் வாகனங்கள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஒரு நாட்டை அழிக்க போர் தேவையில்லை... தாய் மொழியை அழித்தாலே அழிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்