சொத்துகளை ஏமாற்றி பறித்துக்கொண்ட மகன் மீது தந்தை கண்ணீருடன் புகார் தருமபுரி காந்தி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலர் வேணுகோபால் என்பவருக்கு ஜெயக்குமார் பாபு, நந்தகுமார், ஷர்மிளா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஜெயக்குமார் மற்றும் சர்மிளா இருவரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேணுகோபால் மனைவி இறந்தவுடன், தனது மூத்த மகன் ஜெயக்குமார் பாபு உடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது மூத்த மகன் ஜெயக்குமார் பாபு தந்தையிடம் சொத்துகளை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. சொத்துகளை கேட்டு தந்தையை அடிக்கடி வலியுறுத்தி வந்ததால் மன உளைச்சல் காரணமாக மூளை பக்கவாதம் ஏற்பட்டு, உடல்நிலைப் பாதிக்கப்பட்ட வேணுகோபால், சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
தனது ஓய்வூதிய பணத்தை வைத்து, மருத்துவ செலவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். கடந்த 2020 பிப்ரவரி மாதம் அடியாட்கள் மூலமாக ஜெயக்குமார் பாபு சொத்து பத்திரங்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் வேணுகோபால் ஓய்வூதியம் பெறுகின்ற ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றையும் ஜெயக்குமார் பாபு பறித்துக் கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மூத்த குடிமகன் என்பதால், எனது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும்; எனது வீட்டிலிருந்து திருடிச் சென்ற ஆவணங்களை மீட்டுத் தந்து ஜெயக்குமார் பாபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேணுகோபால் மற்றும் அவரது மற்றொரு மகன் நந்தகுமார் ஆகிய இருவரும் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தருமபுரி எம்.பி.!