தருமபுரி:அதிமுக அரசின் முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் கடந்த 2016 - 2021 வரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், ரூ.45.20 கோடி சொத்து தொடர்பான இந்த வழக்கில் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் உறவினர்கள் என 11 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த மே மாதம் 22ஆம் தேதி காவல்துறை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஜூலை 13ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மேலும், வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை கடந்த நவம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் முறையாகச் சமன் அனுப்பப்பட்டு, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேர், தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.