தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் நடத்த தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை அனைத்துத் தொகுதிகளுக்கும் இன்று கொண்டுசெல்லப்பட்டன.
அந்த வகையில் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட எரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு போன்ற மலைக் கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாததால், வாக்குப்பதிவு இயந்திரங்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
கோட்டூர் மலையிலுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு மலை அடிவாரத்திலிருந்து கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தேர்தல் அலுவலர்கள் கொண்டு சென்றனர். கோட்டூர் மலை சுமார் ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த மலைப்பாதைகள் செங்குத்தாக உள்ள காரணத்தினாலும், யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் நடமாடி வருவதாலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை தீவிர பாதுகாப்புடனும், வனத் துறையினரின் உதவியுடனும் காவல் துறையினர் கொண்டுசென்றனர்.
கிராமத்தில் ஆண் வாக்காளர்கள் 351, பெண் வாக்காளர்கள் 321 என 672 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதி இல்லாததால், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர். அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து வாக்குப்பதிவு செய்ய வைத்துள்ளனர்.
இப்பகுதிக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் கழுதை உரிமையாளர் சின்ராஜ்க்கு ரூ.5 ஆயிரம் வாடகையை தேர்தல் ஆணையம் வழங்குகிறது.
இந்தக் கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் சின்ராஜ் என்பவர் கடந்த 45 ஆண்டுகளாக இந்தப் பணியை செய்துவருகிறார். இவர் மேலும் கிராம மக்களுக்கு நியாய விலைக்கடை அரிசி உள்ளிட்ட பொருட்களையும் கொண்டு செல்லும் பணியை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
மலை கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்