தர்மபுரி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் காவல் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூர் சோதனை சாவடியில் தொப்பூர் காவல்ஆய்வாளர் சர்மிளா பானு மற்றும் காவலர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். திறந்தவெளி லாரிகள், வாகனங்களில் வரும் பொருள்கள், நவீன முறையில் கண்ணாடி அமைத்து சோதனை செய்தும், அனுமதியின்றி வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் கட்டப்படுவதை அகற்றியும், பயணிகளின் பைகள், காய்கறி வண்டிகள் என அனைத்தையும் சோதனை செய்கின்றனர்.
தொப்பூர் சோதனை சாவடியில் காவலர்கள் தீவிர சோதனை! இதற்காக, மாவட்டம் முழுவதும் இரண்டு குழுவாக 3 ஷிப்ட் முறையில் ஒரு காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர் 10 காவலர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி காவலர்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையும், 2 மணிமுதல் இரவு 9 மணி வரையும், இரவு 9 மணிமுதல் காலை 8 மணி வரையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் பண விநியோகத்தை தடுக்க தொப்பூர், காடு செட்டிப்பட்டி, ஒகேனக்கல், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அனுமன் தீர்த்தம், கோட்டப்பட்டி, பொம்மி டி,திப்பம் பட்டி, காரிமங்கலம், பஞ்சப்பள்ளி, ஏரியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் தீவிரமாக வாகன தணிக்கை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கணக்கில் வராத பணம் - ரூ.19 லட்சத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படை!