திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதத்திற்கான செயல் திட்டங்கள், அவர்கள் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கை ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். அதன்படி தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஜூன் மாதத்திற்கான செயல் திட்டங்களை ஸ்டாலினிடம் வழங்கினார்.
திமுக எம்.பி. செந்தில் குமாருக்கு என்ன மார்க்?
தருமபுரி: தனது செயல்திட்டங்களை கட்சி தலைமைக்கு அறிக்கையாக தாக்கல் செய்திருக்கும் தருமபுரி எம்.பி. செந்தில் குமாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்ன மார்க் போட்டிருப்பார் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.
தற்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தருமபுரி மாவட்டத்தில் மக்களுக்கு அவர் செய்த பணிகள் குறித்த அறிக்கையையும் அவர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். அந்த அறிக்கையில் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரிவு மற்றும் தீவிர விபத்து சிகிச்சை பிரிவு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தது, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட குடிநீர் பிரச்னை, மருத்துவ உதவி உள்ளிட்ட பணிகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அவரது தொடர்ச்சியான செயல்பாட்டை கவனித்துவரும் ஸ்டாலின் அவருக்கு என்ன மார்க் போட்டிருப்பார் என்ற கேள்வி அறிவாலயத்திலும், செந்தில் குமாரின் ஆதரவாளர்களிடமும் எழுந்துள்ளது.