தருமபுரி:தருமபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defence Research & Development Organisation - DRDO) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், திமுக எ.பி-யான டாக்டர் டி.என்.வி செந்தில்குமார் இந்த பணியை விரைவுபடுத்த வேண்டும் என விதி எண் 377-ன் கீழ் மக்களவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தருமபுரி தொகுதியின் எம்.பி-யான செந்தில்குமார் விதி எண் 377-ன் கீழ் மக்களவையில் பேசுகையில், “தருமபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு அமைப்பதன் மூலம், அங்கு உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். 2010ஆம் ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) எடுத்த முயற்சி குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
தருமபுரி மாவட்டம், நெக்குந்தி கிராமத்தில் உள்ள நிலத்தை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அடையாளம் கண்டு பரிந்துரை செய்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) அதிகாரிகளும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். இருப்பினும், முன்மொழியப்பட்ட திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. தர்மபுரி மாவட்டம் தொழில்துறையில் பின்தங்கிய பகுதியாக இருப்பதால், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாவட்டத்தை தொழில் வளம்மிக்க பகுதியாக மாற்ற முடியும்.
இந்த DRDO ஆராய்ச்சி மையம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் மேக் இன் இந்தியா முயற்சிக்கு உந்துதலாக செயல்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தின் மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கவும், முன்மொழியப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு (DRDO) பாதுகாப்புத் துறை அமைச்சரகம் உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:“தமிழக விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த சி.ஐ.எஸ்.எப் நியமிக்க வேண்டும்”..பாமக நிறுவனர் ராமதாஸ்!