தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் திண்டல் உச்சப்பட்டி வண்டிக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வேளாண்மை செய்துவருகிறார்.
மாடு, ஆடுகளை வீட்டில் வளர்த்துவருகிறார். இதில் இரண்டு ஆடு கோயிலுக்குப் பலியிட தனியாக வளர்த்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் இவரது வீட்டின் அருகே நாய்கள் குரைத்துள்ளன.
சக்திவேல் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது இவரது ஆட்டுப்பட்டியில் இருந்த இரண்டு ஆடுகளை ஐந்து நபர்கள் திருடுவதைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார்.
இதனை அடுத்து காரில் வந்த ஐந்து நபர்களும் ஆட்டை விட்டுவிட்டு சிதறி ஓடி உள்ளனர். ஆடு திருடவந்த நபர்களை சக்திவேல் துரத்திக்கொண்டு ஓடி இருவரைப் பிடித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து காரிமங்கலம் காவல் துறையினர் ஆடு திருடவந்த நபர்களை விசாரணை செய்தனர். விசாரணையில் பாலக்கோடு பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சத்தியமூர்த்தி (26). மாரண்டஅள்ளி கதிரவன் மகன் குமார் (26). ஜக்கசமுத்திரம் சொக்கலிங்கம் மகன் தனசேகரன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களைக் கைதுசெய்த காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர். ஆடு கடத்த பயன்படுத்திய கார், இரண்டு ஆடுகளைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க : சிசிடிவியில் சிக்கிய ஆடு, மாடு திருடும் கும்பல்!