அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பா தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இன்று (செப்.21) காலை துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தபோது, தொட்டியில் துர்நாற்றம் வீசியது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் விசாரணை மேற்கொண்டு தொட்டியை சுத்தம் செய்துள்ளனர்.
மேலும், பள்ளி சின்டெக்ஸ் தொட்டியிலிருந்த தண்ணீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதா அல்லது விலங்கினங்களின் எச்சங்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே வேங்கை வயலில் மக்கள் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயண திருப்பதி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளாவது, "தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த அருவருப்பான, வெட்கக்கேடான, கேவலமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த இழிசெயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
வேங்கை வயலில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்தை செய்த நபர்களை 300 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை தமிழக அரசு கண்டுபிடிக்க முடியாததும், அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றியவர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும்தான், மீண்டும் இது போன்றதொரு அவலத்தை நாம் காண வழி வகுத்துள்ளது.
இனி இது போன்ற கேவலங்கள், கொடூரங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு, வேங்கை வயல் மற்றும் பனைக்குளம் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் சமூக நீதி காக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக, இனி சமூக நீதி தவறிய திமுக ஆட்சி, தீண்டாமையை ஒடுக்கத் தவறிய கட்சி என்றே அழைக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:“கட் ஆப் மதிப்பெண்னை பூஜ்ஜியமாக குறைப்பதால் மாணவர்களின் தகுதி குறையவில்லை” - டாக்டர் ஜி.ஆர் ரவீந்திரநாத்