தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கின் காரணமாக, பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியது.
இதனடிப்படையில், தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள கடைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் சுழற்சி முறையில் அனுமதி அளித்துள்ளது.
தருமபுரி நகரப் பகுதிக்குள் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் வருவதைத் தவிர்க்க 8 இடங்களில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகரப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நாள்களைத் தவிர, மற்ற நாட்களில் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி கடைகளைத் திறந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் கடைகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் கடைக்காரர்களை, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், கடைகளில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 16 வகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது .