தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெல்மெட் போடலையா... வாங்க சார் ஜாலியா ஒரு ட்ரிப் போவோம்

தருமபுரி: தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களை புதிய நீதிமன்ற வளாகத்திற்கு இன்ப சுற்றுலாவாக காவல் துறையினர் அழைத்துச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

helmet awareness

By

Published : Aug 7, 2019, 5:39 PM IST

தமிழ்நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போக்குவரத்து காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இதில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணியை நடத்திவந்தனர். அப்போது, தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை அபராதம் விதிக்காமல், மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

தற்பொழுது புதிய முயற்சியாக தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை பிடித்து, வாகனங்களை காவல் துறை கட்டுப்பட்டில் வைத்துக்கொண்டு, அபராதம் விதிக்காமல், அவர்களின் விவரங்களை பதிவு செய்தனர்.

பின் அவர்களை காவல் துறையினர் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து, தருமபுரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மகிளா, கூடுதல் மகிளா நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்களுக்கும் சுற்றுலா அழைத்துச் சென்றனர்

தலை கவச இன்ப சுற்றுலா

இந்தச் சுற்றுலாவானது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி, நீதிமன்றத்திற்கு அபராதம் செலுத்தச் சென்றால், அங்கு என்ன நிகழும் என்பதனையும், காலதாமதம் ஏற்படுவதையும் உணர வேண்டும் என்ற நோக்கத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணியாதவர்களை காவல் துறையினர் பிடித்து நீதிமன்றத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னதாக தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு, தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகளும், அணியாமல் வந்தால் ஏற்படும் இழப்புகள் குறித்து காவல் துறையினர் எடுத்துரைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details