தருமபுரி:பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்ரல் 8) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத்(Vande Bharat) ரயிலைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர் வழியாகத் தருமபுரி மாவட்டம் மொரப்பூரை தாண்டி சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களைக் கடந்து கோயமுத்தூர் சென்றடைகிறது.
நாளை முதல்(ஏப்ரல் 9) சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் சேலம் சந்திப்பு, ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் சென்று இறுதியாக கோயம்புத்தூர் சந்திப்பு சென்றடைகிறது. இன்று துவக்க நாளை முன்னிட்டு பெரம்பூர், அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் வந்தே பாரதத்தில் செல்ல வேண்டுமென்றால், சேலம் சென்று அங்கிருந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்தினால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், இந்த ரயிலின் மூலம் சென்னை மற்றும் கோவை செல்வதற்கும், மேலும் சென்னையில் இருந்து தருமபுரி வருவதற்கும், கோவையில் இருந்து தருமபுரி வருவதற்கும் வாய்ப்பாக பயன்படும் வகையில் இருக்கும்.