தருமபுரி: அரூர் அடுத்து கலசப்பாடி, அரசநத்தம் என்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலின்போது நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திமுக சார்பில் போட்டியிட்ட டி.என்.வி. செந்தில்குமார் அப்பகுதி மக்களை சந்தித்து தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் எனவும், சாலை வசதியை ஏற்படுத்தித்தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறு உறுதி அளித்தது போலவே நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப்பேச்சில், இப்பகுதி மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக வனத்துறை மற்றும் மத்திய வனத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகத்தை அணுகி சாலை வசதி செய்து தர ஏற்பாடுகளை செய்து வந்தார். தற்போது கலசப்பாடி, அரசநத்தம் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து ஏற்படுத்த வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி செந்தில்குமார், ”அரூா் கலசப்பாடி, அரசநத்தம் பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள்.
இதனை அறிந்து நேரடியாகச் சென்று அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எந்த கட்சிக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள். தேர்தலை புறக்கணிக்க வேண்டாம், ஐந்தாண்டு காலத்தில் சாலை வசதியை ஏற்படுத்தித் தருவேன் என்ற வாக்குறுதி அளித்தேன். வெற்றி பெற்ற பிறகு இதனை நிறைவேற்ற கன்னிப் பேச்சில் கிராமத்தை குறிப்பிட்டுச் சாலை வசதி ஏற்படுத்த மத்திய அரசு அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.